வல்வை படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வை நலன்புரி சங்கம் (பிரித்தானியா ) ஒழுங்கமைப்பில் 02/08/2025 லண்டனில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகளால் 72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி. 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர். 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன. 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்.
வருகை தந்திருந்த எம் இளம் சந்ததியினருக்கு இந்த வரலாறு வல்வை நலன்புரி சங்கத்தினரால் விளக்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்ட மக்களை நினைவேர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.